தமிழ் மாதங்களில் ஏழாவதாக வருவது ஐப்பசி மாதம் ஆகும். பருவகாலங்களில் முற்பனிகாலம் எனப்படும் பனிப்பொழிவு தொடங்கும் காலமாக இந்த ஐப்பசி மாதம் இருக்கிறது. ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி.
அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும்.
இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. பின்வரப்போகும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள், மாதங்களுக்கு
தொடக்கமாக இருக்கும் ஐப்பசி மாதத்தில் புண்ணிய நாதி நீராடல், வழிபாடுகள் பல
ஆலயங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. புனிதமான ஐப்பசி மாதத்தின் 30 நாட்களும், அனைத்து புனித நதிகளும், தமிழகத்தில் ஓடும் தெய்வீக நதியான காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம்.
துலா ஸ்நானம்
ஐப்பசி மாதம் முதல் தேதி முதல் 30 நாட்கள் இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவேரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவேரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும். இந்த மாதத்தில் 63 கோடி புண்ய தீர்த்தங்கள் 14 லோகத்தில் இருந்து இந்த பூலோகத்தில் காவிரியில் கலந்து விடுவதாக சொல்லப்படுகிறது.
கோவத்ச துவாதசி
ஐப்பசி மாதம் 3ம் தேதி கோவத்ச துவாதசி ஆகும். ஐப்பசி வளர்பிறை பிரதமை அன்று கிருஷ்ண பகவான் கோகுல மக்களை கடும்மழை மற்றும் புயலிலிருந்து காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தார். ஆகையால் அன்று மாலை நேரத்தில் 04-30 மணி முதல் 06-00 மணிக்குள் பசுவுக்கும் கன்றுக்கும் உணவு கொடுத்து பூஜித்து வழிபட்டால் வீட்டில் பெண்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
தனத்திரயோதசி / தன்வந்திரி ஜெயந்தி
ஐப்பசி மாதம் 4ம் தேதி தேய்பிறை
திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது. திருமகளின் அருளை சேர்க்கும் நாள். அன்றைய தினம் தீபாவளிக்கு
வேண்டிய பொருட்களையும், துணிகளையும், தங்க நகைகளையும் வாங்கி தீபாவளி
அன்று மாலை லட்சுமிகுபேர பூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். இன்றைய தினம் அக்ஷய திருதியைக்கு சமமானது.
திருமால் மக்களுக்காக மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும்.நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது. திருமாலின் 24 அவதாரங்களில் 17ஆவது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும். இந்து மதத்தில் தன்வந்திரி உடல் நலத்திற்காக வழிபடக்கூடிய கடவுள் ஆவார். தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் கூறலாம்.
தீபாவளி
ஐப்பசி மாதம் 5ம் தேதி தீபாவளி ஆகும். ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம்-தேய்பிறை சதுர்தசி திதி நரக சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளன்று கிருஷ்ணர் நரகாசுரனை கொன்று மக்களை காத்தமைக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கிருஷ்ணர் பூஜையும் லட்சுமி குபேர பூஜையும் செய்வது சிறப்பு. இப்பண்டிகையின்போது நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர். பின் புதிய ஆடைகள், பட்டாசுகள், இனிப்புக்கள், பட்சணங்கள் வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.
வடமாநிலங்களில் தீபாவளி 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
· முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.
· இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.
· மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்.
· நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்.
· ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.
கேதார கௌரி விரதம்
ஐப்பசி மாதம் 6ம் தேதி கேதார கௌரி விரதம். இன்று அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. இவ்விரதம் புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி (விஜயதசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையைப் பின்பற்றியே உமையம்மை சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். இதனால் இறைவன் மாதொரு பாகன், அர்த்த நாரீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். இவ்விரத முறையில் அதிரசம் என்ற பொருள் பிரசாதமாகப் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
யமத்துவிதியை
ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும்.
எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இன்று சகோதரன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்கு சென்று வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு அசீர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும். மேலும் சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன் கூறுகிறார்.
அன்னாபிஷேகம்
ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிசேகம் செய்யப்படுகிறது. உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவே ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். இதைத்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கூறியுள்ளனர்.
சமைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து காய்கறிகள்,பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். அன்னாபிஷேக நாளில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அந்த அன்னமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுபவர்களுக்கு உணவு பஞ்சமே ஏற்படாது என்பது நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை தரிசிக்க அன்னாபிஷேகமும், அன்னதுவேஷமும் நீங்கும்.
வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் பூசி வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் சிவலிங்கத்தின் பாண பகுதியில்
இருக்கும் அன்னமானது தனியே
எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்து விடப்படுகிறது. ஆவுடைப்பகுதியில் இருக்கும் அன்னமானது தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது.
கந்த சஷ்டி
கந்த சஷ்டி விழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீமையின் உருவாக திகழ்ந்த சூரபத்மனை அழித்த முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கியமாக திகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும். இந்த விரதத்தினை ஒப்பரும் விரதம் என்று கந்த புராணம் குறிப்பிடுகிறது.
எல்லா முருகன் கோவில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விரதமுறையில் சிலர் ஆறுநாட்கள் உண்ணாமலும், ஒருவேளை உணவு உண்டும், சஷ்டி அன்று மட்டும் உண்ணாமலும் விரதம் மேற்கொள்கின்றனர். ஒரு சிலர் ஆறு மிளகை வாயிலிட்டு ஆறு கை நீரருந்தியும், ஒரு சிலர் மௌன விரதம் இருந்தும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். இவ்விரத வழிபாட்டில் கந்த சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த குரு கவசம், சண்முக கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் போன்றவற்றை பாராணயம் செய்கின்றனர்.
ஐப்பசி மாதத்தை சிறப்பு செய்தவர்கள்
இம்மாதத்தில் திருமூல நாயனார், நின்றசீர் நெடுமாற நாயனார், இடங்கழி நாயனார், சக்தி நாயனார், பூசலார் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது. பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களின் ஜெயந்தியும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.







