Tuesday, July 21, 2020

புரட்டாசி மாதம்

தமிழ் மாதங்களில் ஆறாவதாக இருக்கும் மாதம் புரட்டாசி. மிகவும் தெய்வீக தன்மை நிறைந்த மாதமாகவும், பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் இந்த மாதம் பார்க்கப்படுகின்றது.

சூரியபகவான் கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் பொழுது புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதம், முன்னோர்களுக்கு விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர் என்பது மக்களின் நம்பிக்கை. புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. ஆகவே இந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும்.

திருமலை திருப்பதி பிரம்மோற்சவம்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா புரட்டாசி மாதம் சனிக்கிழமை தொடங்கி மாத இறுதி வரை நடைபெறும். திருமலை திருப்பதி ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் பகலில் கருடக்கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது ,பிரம்மோற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் மலையப்ப சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் பவனி வருவார்.

https://www.google.com/maps/place/Tirupati,+Andhra+Pradesh/@13.6276132,79.2847143,11z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a4d4b0f88620427:0xcf4152d1daca0cac!8m2!3d13.6287557!4d79.4191795

நவராத்திரி

நவராத்திரி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, வண்ணமயமான கொலு பொம்மைகள். சுவாமி சிலைகள் முதல் குழந்தைகளைக் கவரும் கார்ட்டூன் பொம்மைகள் வரை எல்லாமே ரசிப்பு தன்மையுடன் இருக்கும். நவராத்திரியில் வீடுகளில் கொலு வைப்பது  மரபு. புரட்டாசி மஹாளய அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது நவராத்திரி பண்டிகை. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை கொண்டாடுகிறோம். ஒன்பது நாட்கள் அம்பிகையை அலங்கரித்து சிறப்பாக வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம். வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் முக்கியம். மூன்றும் கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று சக்திகளை வழிபடுகின்றோம். வீரத்திற்கு மூன்று நாட்கள், செல்வத்திற்கு மூன்று நாட்கள், கல்விக்கு மூன்று நாட்கள் ஆக ஒன்பது நாட்களாகநவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சோழர் காலத்தில், நவராத்திரி விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில், நாயக்கர் காலத்திலிருந்து தான், மக்கள் கொண்டாடும் ஒன்பது நாள் திருவிழாவாக, நவராத்திரி விழா மாறியது. நவராத்திரி காலத்தில் தான், மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை, விஜயநகர மன்னர்கள் ஏற்படுத்தினர். ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு, முதன் முதலாக, நவராத்திரி கொண்டாடும் உரிமையை, மன்னர் திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில், நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது. நவராத்திரி நாட்களில் பெண்கள், கன்யா பூஜை செய்தால், சகல செல்வங்களையும் பெறலாம். நவராத்திரி பண்டிகையை, ராமர் தான், முதன் முதலில் கொண்டாடியதாக, புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவராத்திரி விரதத்தை ராமபிரான், கடைப்பிடித்த பிறகு தான், அவருக்கு, சீதை இருக்கும் இடம் தெரிந்தது என்று, தேவி பாகவதம் சொல்கிறது.

அலங்காரங்கள்

நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பதுவகையான அலங்காரம் செய்வது வழக்கம். நவராத்திரியில் சுமங்கலிகளையும் 10 வயதிற்குட்பட்ட கன்னிப் பெண்களையும் பூஜித்து வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் அம்மனுக்கு தினசரி ஒவ்வொரு வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.

பிரதமை

நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. இன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்கவேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.

துவிதியை

இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி தேவியாக போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும்.

திரிதியை

மூன்றாவது நாளுக்கு உரிய வாராகி அன்னை, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

சதுர்த்தி

நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

பஞ்சமி

ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர். முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை.

சஷ்டி

ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. இவள் விரும்புவது தேங்காய் சாதம்.

சப்தமி

ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிபடலாம்.

அஷ்டமி

எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, சர்க்கரை பொங்கல் படையல் இட்டு வழிபடலாம்.

நவமி

ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

விஜயதசமி

பத்தாவது நாள் விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.

https://www.google.co.in/maps/place/Arulmigu+Saraswathi+Temple+Koothanur/@10.9350043,79.6371483,15z/data=!4m12!1m6!3m5!1s0x3a553b86b8ebadc3:0x325a4317ffa52032!2sArulmigu+Saraswathi+Temple+Koothanur!8m2!3d10.9331766!4d79.6456616!3m4!1s0x3a553b86b8ebadc3:0x325a4317ffa52032!8m2!3d10.9331766!4d79.6456616?hl=en


No comments:

Post a Comment