தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக மலர்கிறது ஆனி. நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் 38 நிமிடம் வரை இந்த மாதத்தில் பகல் பொழுது நீண்டிருக்கும். இந்த மாதத்தில் 32 நாட்கள் உள்ளன. ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள்.ஆனி மாதம் தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மனிதர்களாகிய நமக்கு ஆனி மாதக் காலமாகும்.
இந்த மாதத்தில்தான் தேவர்களைக் காப்பதற்காகத் திருமால் எடுத்த கூர்ம அவதார தினம், நடராஜப் பெருமானுக்குரிய ஆனித் திருமஞ்சனம், குருபூர்ணிமா ஆகிய பல்வேறு விசேஷங்கள் வருகின்றன. 'ஜேஸ்டா' என்று அழைக்கப்படும் இந்த ஆனி மாதம், கோயில்களில் கும்பாபிஷேகங்கள் செய்ய உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.
யோகினி ஏகாதசி
ஆனி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘யோகினி ஏகாதசி’ என்று பெயர். ஏகாதசி தினங்கள் எல்லாமே விஷ்ணு வழிபாட்டுக்கு உகந்த நாள். யோகினி ஏகாதசி தினத்தன்றுதான் அழகாபுரி மன்னனான குபேரன் விரதமிருந்து, திருமாலை வழிபட்டுத் தன் நோயைப் போக்கிக்கொண்டான்.
ஆனி கேட்டை நட்சத்திரம்
ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும். 108 திவ்யதேசங்களில் முதன்மையானதாக கருதப்படும் திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில், ஆனி மாத கேட்டை நட்சத்திரம் அன்று, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படும்.
ஆனி மூலம்
ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்'என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். மூல நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது அரசாளும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் அதனால் நிர்மூலம் உண்டாகும் என்றும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். அது உண்மையில் ஆனி மூலம் அரசாளும், கன்னி ராசியில் வரும் மூலம் நிர்மூலம் என்பதே ஆகும்.
கூர்ம ஜயந்தி
திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றான கூர்மாவதாரம் ஆனி மாத தேய்பிறை துவாதிசி திதியில் நிகழ்ந்தது. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, பகவான் விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மந்தார மலையைத் தாங்கி அமிர்தம் தோன்ற உதவிய தினம் இன்று. இந்த நாளில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பானது.
மாணிக்கவாசகர் குருபூஜை & அமர்நீதி நாயனார் குருபூஜை
திருவாசகம் அருளிய மகான் மாணிக்கவாசகர். 32 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தன் வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் ஆனி மாதம், மகம் நட்சத்திரத்தில் ஈசனோடு இரண்டறக் கலந்தார். அவரது குருபூஜை தினத்தையொட்டி இன்று சிவன் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். சிவத்தொண்டு செய்வதையே தன் வாழ்நாள் இலக்காகக்கொண்டு வாழ்ந்த அமர்நீதி நாயனார் சிவபெருமானோடு ஐக்கியமானது ஆனி மாதப் பூரம் நட்சத்திர தினத்தில்தான். இவரது குருபூஜை தினத்தன்று சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பவுர்ணமி
ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. திருச்சி அருகே உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோவிலில், அன்றைய தினம் மாம்பழ அபிஷேகம் செய்யப்படும். பக்தர்கள் கூடை கூடையாக மாம்பழங்களைக் கொண்டு வந்து அம்மனுக்கு சமர்ப்பிப்பார்கள். அதைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் அந்த மாம்பழங்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆனி மாத பவுர்ணமி தினத்தன்று, சுவாமிக்கு வாழைப்பழ தார்களை கொண்டு வந்து காணிக்கை யாக சமர்ப்பித்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.
ஆனித் திருமஞ்சனம்
ஆடல் வல்லான் நடராஜருக்கு வருடத்தில் ஆறு அபிஷேகங்கள் மட்டுமே நடைபெறும்.
ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று ராஜசபை எனும் ஆயிரங்கால் மண்டபத்தில்
சூரிய உதயத்துக்கு முன் அதிகாலையில் நடைபெறும் அபிஷேகமே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது. ஆனித் திருமஞ்சனத்தின்போது நடராஜரைத் தரிசித்தால் தோஷங்கள் அனைத்தும் விலகி வளம் பெருகும் என்பது ஐதிகம்.



Hi it was very useful gud job keep going
ReplyDeleteHi it was very useful gud job keep going
ReplyDeleteThank You 🙏🏻
Delete