தெய்வ திருமணங்கள் பலவும் நடந்தேறிய மாதம் பங்குனி மாதம். காமாட்சி அன்னை ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்த பங்குனி மாதத்தில்தான். ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும், சூரியனைத் தந்தை என்றும் உருவகப்படுத்துவார்கள். சந்திரனாகிய தாய், தந்தையாகிய சூரியனுக்கு உரிய நட்சத்திரமான உத்திரத்தில் சஞ்சரித்து பவுர்ணமியைத் தோற்றுவிப்பது பங்குனி மாதத்தில். கார்த்திகை மாதத்தைப் போலவே, அம்மையப்பனின் இணைவாக இந்த மாதமும் சிறப்புப் பெறுவதால் சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் தெய்வத் திருமணங்கள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன.
காரடையான் நோன்பு
குறைவான ஆயுள் கொண்டவன் என்பதை அறிந்தும் சாவித்திரி சத்தியவானைத் திருமணம் செய்துகொண்டாள். எமதர்மன் சத்தியவானின் உயிரைப் பரித்துச் செல்ல வந்தான். அப்போது, எமதர்மனிடம் வாதிட்டு அனுமதிபெற்று தன் கணவன் சத்தியவானை காக்கும் பொருட்டு அம்மனை வணங்கிக் கடுமையான நோன்பு நோற்றாள். அதன் பலனாக சத்தியவான் மீண்டுவந்தான். அப்போது சாவித்திரி மேற்கொண்ட விரதமே காரடையான் நோன்பு எனப்படுகிறது. தீர்க்க சுமங்கலி பாக்கியத்துக்காகப் பெண்கள் மேற்கொள்ளும் தலையாய நோன்பு காரடையான் நோன்பு. “உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நோன்பு நோற்றேன், ஒருக்காலும் என் கணவன் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும்”, என்று சொல்லி வேண்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலி வரம் கிட்டும் என்பது நம்பிக்கை.
ஆமலகீ ஏகாதசி
ஏகாதசி, பெருமாளை வணங்குவதற்கு உகந்த நாளாகும். பங்குனி வளர்பிறை ஏகாதசிக்கு 'ஆமலகீ ஏகாதசி ' என்று பெயர். இன்றைய தினத்தில் விரதமிருந்து, நெல்லி மரத்தடியில் பரசுராமர் படத்தை வைத்து பூஜை செய்தால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். பசு தானம் செய்த புண்ணியமும் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். ஆமலகீ ஏகாதசி விரதம் மூலம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பங்குனி பௌர்ணமி
சந்திரன் தனது ஒளியைப் பரிபூரணமாக பூமி மீது வழங்கும் நாள் பௌர்ணமி. அதனால், பௌர்ணமியன்று செய்யப்படும் அம்பிகை வழிபாட்டுக்குப் பலன்கள் அதிகம். பௌர்ணமி இரவு நேரத்தில் சிவ வழிபாடு செய்த பிறகு திருவண்ணாமலை, சங்ககிரி போன்ற புண்ணிய மலைத் தலங்களில் கிரிவலம் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும்.
ஹோலிப் பண்டிகை
இரணியன் எனப்படும் ஹிரண்யகசிபுவின் சகோதரி ஹோலிகா, இவள் நெருப்பால் அழியாத தன்மையைக் கொண்டவள். இரணியனின் கட்டளைப்படி பிரகலாதனை அழிக்க அவனுடன் நெருப்புக்குள் இறங்கினாள் ஹோலிகா. அப்போது ஹோலிகா எரிந்துவிடுவாள், பிரகலாதனை நெருப்பு சுடாது. ஹோலிகா, அக்னி பகவானால் எரிக்கப்பட்டதன் நினைவாகக் கொண்டாடப்படும் வண்ணமயமான வசந்த உற்சவமே ஹோலிப் பண்டிகை. ஒருவர் மற்றொருவர் மீது சகோதரத்துவத்துடன் வண்ணங்களைப் பூசி மகிழும் நாள் இது.
காம தகனம்
தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமானின் தவத்தைக் காமபாணம் தொடுத்துக் கலைத்துவிடுவான் மன்மதன். தனால், கோபம்கொண்ட சிவபெருமான் தன் மூன்றாவது கண் திறந்து மன்மதனை எரித்தார். இந்த நிகழ்வே பங்குனி பௌர்ணமியின்போது காம தகனம் என்று கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில் காதல் திருவிழாவாகவும் இந்தக் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திரம்
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமை உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. ஸ்ரீ ஐய்யப்பன், பாண்டவர்களில் அர்ஜுனன், முருகனின் மனைவியான வள்ளி ஆகியோர் ஜனித்த தினம் பங்குனி நட்சத்திர தினமாகும்.
மேலும் பார்வதி – பரமேஸ்வரன், ஆண்டாள் – ஸ்ரீரங்கநாதர், மீனாக்ஷி – சுந்தரேஸ்வரர், தெய்வானை – முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே பெரும்பாலான கோயில்களில் இந்த தினத்தில் விஷேஷ பூஜைகள், உற்சவங்கள் நடைபெறுகின்றன.
எண்ணிக்கையற்ற பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். உத்திர நட்சத்திர நாயகன் அதாவது அதிபதி சூரியன். அதே நாளில் நிறை நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமானை கல்யாண சுந்தரமூர்த்தியாக பாவித்து அனுஷ்டிக்கும் விரதம் இது. பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் நடக்கும் என்பது ஐதீகம்.
காரைக்கால் அம்மையார் குருபூஜை
'அம்மையே ' என்று ஈசனின் திருவாயால் அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். தனது பக்தியின் மூலமும் பாடல்கள் மூலமும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி, கையாலேயே நடந்து கயிலை சென்று இறைவனைத் தரிசித்த காரைக்கால் அம்மையாரின் குருபூஜை, பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது.
விஜயா ஏகாதசி
ஏகாதசி பெருமாளுக்குரிய நாள். பங்குனி மாதத்தில் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். விஜயா ஏகாதசி தினத்தில் ஏழு தானியங்களை ஒன்றன் மேல் மற்றொன்றைப் பரப்பி மகா விஷ்ணுவை ஆவாஹணம் செய்து வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.


