Sunday, July 5, 2020

சித்திரை மாதம்

சித்திரை மாதத்தின் சிறப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வசந்த நவராத்திரி, ராம நவமி, மத்ஸ்ய ஜெயந்தி, சித்திரைத் திருவிழா, அட்சய திருதியை போன்ற விழாக்களும், காமதா ஏகாதசி, பாபமோசனிகா ஏகாதசி, பைரவர் விரதம் போன்ற விரத முறைகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். இம்மாதத்தோடு வசந்த காலம் நிறைவடைகிறது. சூரியன் இம்மாதத்தில்தான் உச்சநிலையினை அடைந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. சித்திரை மொத்தம் 31 நாட்களைக் கொண்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு

 

சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டில், வீட்டிலுள்ள பெரியவர்கள் பஞ்சாங்கம் வாசிப்பதும், அதை சிறியவர்கள் கேட்பதும், காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கம். யோகம், திதி, கரணம், வாரம், நட்சத்திரம். இந்த ஐந்து அங்கங்களையும் கொண்டதால் இது பஞ்சாங்கம் எனப்படும். இதில் திதியை அறிவதால் திருமகள் அருள் கிட்டும். நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் அகலும். வாரம் ஆயுளை அதிகரிக்கும். யோகம் அறிவதால் நோயற்ற வாழ்வு உண்டாகும். அனுதினமும் கரணத்தைப் பற்றி அறிவதால், காரியம் சித்தியாகும். எனவே தினமும் பஞ்சாங்கம் படிப்பது அளவற்ற நன்மைகளைத் தரும். தினமும் படிக்க முடியாதவர்கள், சித்திரை முதல் நாளில் மட்டுமாவது, வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி, இறைவனை வழிபட்டுவிட்டு, அன்றைய தினத்துக்கான பஞ்சாங்கக் குறிப்பை படிக்கவேண்டும். வீட்டில் படிக்க வசதி இல்லாதவர்கள், கோயிலுக்குச் சென்று பஞ்சாங்கம் வாசிப்பதைக் கேட்கலாம்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகள், மாதப்பிறப்பு, மகா பெரியவா பிறந்த நாள் போன்ற நாள்களில், கோயிலின் வெளிப் பிராகாரத்தில் மட்டுமே தங்கத்தேர் உலா வரும். ஆனால், சித்திரை முதல் நாளன்று மட்டும், தங்கத்தேர், நான்கு ராஜ வீதியிலும் உலாவரும். தமிழ் வருடப் பிறப்பு அன்று, வேப்பம் பூக்களைச் சேகரித்து, புளி, வெல்லம் சேர்த்து பச்சடி செய்வது வழக்கம். இனிப்பும், புளிப்பும், கசப்பும் கலந்த இந்தப் பச்சடி, வாழ்வே இனிப்பும், கசப்பும்,புளிப்பும் கலந்ததுதான்  என்னும் தத்துவத்தை உணர்த்துகின்றது.

கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளானது சித்திரை விஷு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை


சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. பிரம்மதேவர் தனது சிருஷ்டித் தொழிலை துவங்கியதும் இந்நாளில்தான். மிகவும் புண்ணியமான இந்நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள், அரிசி, கோதுமை, தயிர், மோர், குடை, ஆடைகள், தானியம், பழம் போன்றவற்றை வறியவர்களுக்குத் தானம் செய்வதால் என்றும் அழியாத செல்வம் நம் வாழ்வில் தங்கும் என்பர்.

மகோதயம் என்னும் நாட்டிலுள்ள ஒரு வியாபாரி ஒவ்வொரு வருடமும் அட்சய திரிதியை அன்று பல விதமான தானங்களை செய்து, கங்கையில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ததால், மறு பிறவியில் அரசனாகப் பிறந்தார். அப்போதும்  அட்சய திரிதியையில் தொடர்ந்து தானம் , தர்மங்கள் செய்ததால் வைகுண்டம் அடைந்தார். இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு. சித்திரையில் வரும் அட்சய திரிதியை அன்று வசதி படைத்தவர்கள் தங்கம் வாங்கு வார்கள். அன்று ஏதாவது ஒரு பொருளை வாங்கினாலும் (மஞ்சள், உப்பு) குடும்பம் செல்வச் செழிப்புடன் திகழும் என்பது நம்பிக்கை.

லட்சுமி பூஜை / மீனாட்சி திருக்கல்யாணம்




https://www.google.co.in/maps/place/Meenakshi+Amman+Temple/@9.9195045,78.1171531,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3b00c58461e46987:0xf134621ce5286703!8m2!3d9.9195045!4d78.1193418

சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

சொக்கநாதர்- மீனாட்சியைத் திருக் கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரையில் சித்திரை மாதம் நடைபெறுகிறது. மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குவது எனப் பல விசேஷங்கள் உண்டு. மீனாட்சி திரு கல்யாணத்தைக் காண, அண்ணன் அழகர் சகலவிதமான ஏற்பாடுகளுடன் புறப்படுவார். தான் செல்வதற்கு முன்பே மீனாட்சி- சொக்கநாதர் திருமணம் நடந்துவிட்டது என்னும் தகவல்  வைகைக் கரையை அடையும்போது,  அவருக்கு வந்து சேரும். கோபத்துடன் ஆற்றில் இறங்கிய அவர், அப்படியே வண்டியூர் போய்விடுவார். அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண வெளியூரில் இருந்து மக்கள் அலை அலையாக வருவர். ஆடல் அரசனைக் குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. அவற்றுள் சித்திரை திருவோணத்தில் நடராஜ பெருமானுக்கு நடைபெறும்   சிறப்பான அபிஷேகமும் ஒன்று.

https://www.google.co.in/maps/place/Sri+Alagar+Temple/@9.9252007,78.1197754,18z/data=!4m14!1m8!3m7!1s0x3b00c58f98cfb84d:0xf368adecdcaf6a57!2sSri+Alagar+Temple!8m2!3d9.9252007!4d78.1197754!14m1!1BCgIgAQ!3m4!1s0x3b00c58f98cfb84d:0xf368adecdcaf6a57!8m2!3d9.9252007!4d78.1197754

சித்ரா பௌர்ணமி

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியே "சித்ரா பௌர்ணமி" ஆகும் . அன்று, சில ஊர்களில்  முழு நிலா வெளிச்சத்தில் ஒரு வகையான உப்பு பூமியில் இருந்து வெளி வரும். இதை "பூமி நாதம்" என்று சித்தர்கள் அழைப்பர். அந்த உப்பு, மருந்துகளுக்கு அதிகமான சக்தியை அளிக்கின்றது என்று சித்தர்கள் கண்டுபிடித்தனர். அதனால் இந்நாளை சித்தர்கள் பௌர்ணமி என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. இன்றும் பூமிநாதம் ரசாயன மருத்துவத் துறையில் உபயோகிக்கப்படுகிறது. சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு. கள்ளழகர் விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. சித்ரா பௌர்ணமியன்றுதான் விழுப்புரம் அருகிலுள்ள கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகளுக்கான விழா நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். காரணம், அங்கே ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் அன்றைய தினத்தில் கிடைக்கும் என்பது ஐதீகம். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில், சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உண்டு. சித்திரா பௌர்ணமியன்று இவருக்கும், இவரது மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக, ஆராதனைகளுடன், திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

https://www.google.co.in/maps/place/Arulmigu+Arunachaleswarar+Temple/@12.2316461,79.0655512,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3bacc0888c761eeb:0x2bbbe52dd9d1f2b2!8m2!3d12.2316461!4d79.0677399?hl=en

காமதா ஏகாதசி


சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி காமதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் திருமாலை விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்ள வாழ்வின் எல்லா நல்ல விருப்பங்களும் நிறைவேறும். 

இவ்விரத முறையைப் பின்பற்றி லலிதன் என்னும் கந்தர்வன் சாபத்தினால் பெற்ற அரக்க உருவத்தில் இருந்து மீண்டும் கந்தர்வ வடிவம் பெற்றான்.

பாபமோசனிகா ஏகாதசி

சித்திரை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி பாபமோசனிகா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபமோசனிகா ஏகாதசி அன்று விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கும்.

பைரவர் விரதம்

சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவ விரதம் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் பகல் உணவு மட்டும் உண்டு விரத முறை மேற்கொள்ளப்படுகிறது.

அன்றைக்கு திருமுறை ஓதுதல் வழக்கத்தில் உள்ளது. இவ்விரத முறையை பின்பற்றினால் சுபிட்சமான வாழ்வுடன் இறுதியில் முக்தி கிடைக்கும்.

 சித்திரை மாதத்தை சிறப்புச் செய்தவர்கள்

ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார், ரமணர், பரசுராமர் ஆகியோரின் அவதாரம் இம்மாதத்தில்தான் நிகழ்ந்தது. திருக்குறிப்புத் தொண்டர், இசைஞானியார், விரன்மிண்டர், மங்கையர்கரசியார், சிறுதொண்டர், திருநாவுக்கரசர் ஆகியோரின் குருபூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.


4 comments: