தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள். மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது. பிராண வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம், ஆடிப்பௌர்ணமி, ஆடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.
சக்தி மாதம்

ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் அழைக்கப்படுகின்றனர். எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர், ஆடியில் விதை விதைத்தால், மழை நாட்களில் பயிர் தழைத்து தை மாத அறுவடையில் நல்ல மகசூல் கிடைக்கும் ஆகவே “ஆடிப் பட்டம் தேடி விதை”என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து நைவேத்தியம் செய்து வழிபடுவது வழக்கம். இதற்கு அறிவியல் பூர்வமான காரணங்களும் உள்ளன. இந்த மாதத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழை வருவதால் பூமி உஷ்ணமாக இருக்கும். அந்த நேரத்தில் மேற்சொன்னவையை அம்மனுக்கு படைத்து உண்டு வந்தால் உடல் நலம்பெறும் சீரான வெப்பநிலையை அடையும் என்பதே ஆகும்.
ஆடி செவ்வாய்
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மிக விசேஷமானவை. "ஆடிச்செவ்வாய் தேடிக் குளி " என்பது பழமொழி. அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். என்பது ஐதீகம்.
ஆடி வெள்ளி
ஆடிவெள்ளி அன்று அம்மன் வழிபாடு மிகப்
பிரசித்தம். இது சகல பாக்கியங்களையும் அள்ளித் தரும். குழந்தைப் பேறு கிடைக்கும். ஆடி
ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடன்களையும், பிரார்த்தனைகளையும் செலுத்தும் நாளாக
கருதப்படுகிறது. அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வழிபடுவது சிறப்பு. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம்
இருப்பது கூடுதல் பலன்களை தரும். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த
நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள்
அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.
ஆடி பதினெட்டு/ஆடிப்பெருக்கு
ஆடி மாதம் 18-ம் தேதி அன்று ஆடி 18 வருகிறது. தமிழகத்தில் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் சுமங்கலிகள் தாலி கயிறை மாற்றுவார்கள். அம்மனுக்கு நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள்.
ஆடிப்பூரம்
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். அம்மன் பிறந்தநாள் ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
ஆடிப்பௌர்ணமி
மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோவிலுக்குச் சென்று வழிபடுவது விசேஷம். அதிலும் ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி மிகவும் விசேஷமானது. ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சார்த்தி, பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், குடும்பத்தில் வளம் பெருகும், நிம்மதி குடிகொள்ளும், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.
ஆடி அமாவாசை
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகும். அன்று நதிகள், கடலில் புனித நீராடி முன்னோர்களை வணங்கி திதி கொடுப்பதும் அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் புண்ணியம்.
கருடஜெயந்தி
ஆடி மாதம் 20-ம் நாள் ஆடி மாத வளர்பிறையில் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது. நாக பஞ்சமி நாளில் நாக தோஷம் உள்ளவர்கள் ஆலயங்களில் நாக பிரதிஷ்டை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள். அதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கைக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வரலட்சுமி விரதம்
ஆடி மாதம் 24-ம் தேதி அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெண்கள் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது, தான தருமங்கள் செய்ய வேண்டும்.
ஆடி தபசு
'தபசு' என்றால் ‘தவம்’என்று பெயர். சங்கரநாராயணர் கோவிலில் ஆடி
மாத பவுர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும். சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு
உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம். இந்த
ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. ஒன்பது நிலை கொண்ட ராஜ கோபுரம் மூலவர் சங்கரலிங்கத்தையும், அம்பாள் கோமதி அம்மன். இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சங்கர
நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது.
https://www.google.co.in/maps/place/Sri+Sankaranarayanar+Temple/@10.803791,78.2883687,7z/data=!4m8!1m2!2m1!1z4K6a4K6Z4K-N4K6V4K6w4K6o4K6-4K6w4K6-4K6v4K6j4K6w4K-NIOCuhuCusuCur-CuruCvjQ!3m4!1s0x0:0xbb027c20883ab848!8m2!3d12.8907959!4d80.231781?hl=en
ஆடி கிருத்திகை
மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. இது முருகனுக்கு உகந்த தினம், முருகனை இந்த நாளில் வழிபாடு செய்வது நல்லது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப் பொறிகள். சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.
உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள்தங்கள் பிரார்த்தனைக்களையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என விமரிசையாக நடக்கும்.
அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனின் பதினாறு வகையான திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
https://www.google.co.in/maps/place/Arulmigu+Thiruthani+Murugan+Temple/@13.1720229,79.6017733,17z/data=!4m12!1m6!3m5!1s0x3a52a51fbfd3971b:0x8e30e7ee32d3b38c!2sArulmigu+Thiruthani+Murugan+Temple!8m2!3d13.1720177!4d79.603962!3m4!1s0x3a52a51fbfd3971b:0x8e30e7ee32d3b38c!8m2!3d13.1720177!4d79.603962?hl=en



This page really helps me to know the entire info abt the aadi month.very useful.
ReplyDeleteTHANKS...
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete