Saturday, September 19, 2020

தை மாதம்

நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வட அரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன

மக்கள் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம், தைப் பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, சாவித்ரி கௌரி விரதம் போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர்

தைப்பொங்கல்/சங்கராந்தி



மக்கள் நல்ல விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளை தைப்பொங்கலாகக் கொண்டாடுகின்றனர்.

இந்நாளன்று அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை மற்றும் வெண்பொங்கல் ஆகியவற்றை செய்து பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள் ஆகியவற்றை சூரிய தேவனுக்கு நெய்வேதயம் செய்து "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.

சங்கராந்தி திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் திருநாளில் ஒரு விளக்கில் நல்லெண்ணையும், இன்னொரு விளக்கில் பசு நெய்யும் இட்டு தீபம் ஏற்றி வழிபடும் விரதம் "சங்கராந்தி விரத தீபோத்யாபணம்" என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த விரதம் கடைபிடித்தால் சிவபெருமான், விஷ்ணு ஆகியோரது அருள் கிட்டும். தை மாதத்தின் 30 நாட்களும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்தது போல் நீராடிவிட்டு, விநாயக பெருமானுக்கு அருகம்புல் சாத்தி வழிபடுவதுடன் கீழ்வானில் உதயமாகும் சூரியனை வழிபட வேண்டும். அப்பொழுது ஆத்யஹ்ருதயம் சொல்லி வழிபடுவதால் ஆரோக்கியம் கிட்டும்.

ரவிகுலத்தில் ராமனாக பிறந்த சூரியனை வழிபட்ட மகாவிஷ்ணுவானவர், கிருஷ்ணாவதாரத்தில் தன் மகன் சாம்பானுக்கு, தான் அளித்த சாபம் நீங்க மகனை சூரிய பூஜை செய்ய சொன்னார். அவ்வாறு சாபன் பூஜித்த நாள், பொங்கல் திருநாள் என்பர். பிருகுமுனிவரின் மகன் வைசம், பயனர் மற்றும் தருமர், அகத்தியர் ஆகியோரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி சூரிய பகவானை வழிபட்டார்கள் என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது.

மாட்டுப் பொங்கல்



உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று மாடுகள் குளிப்பாட்டப்பட்டு சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன. சர்க்கரை மற்றும் வெண்பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்தி பின் வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன. அன்றைய தினம் ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

 

 

https://www.google.co.in/maps/place/Alanganallur+Jallikattu,+Union+Office+Rd,+Alanganallur,+Tamil+Nadu+625501/@10.0471932,78.0882093,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3b00b7e0e3549e31:0x7a8f986f8519d3cc!8m2!3d10.0471807!4d78.0903749?hl=en

காணும் பொங்கல்


தை மூன்றாம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றை தினத்தில் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் கண்டு உறவாடி மகிழ்கின்றனர். ஒற்றுமை மற்றும் பகிர்ந்துண்ணல் போன்றவற்றை வலியுறுத்தும் விழாவாக‌ இவ்விழா அமைகிறது.

திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர் என்ற முற்றும் அறிந்த ஞானியால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமை உலகளவில் கிடைத்திருக்கிறது. தமிழை தரணியில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்திருப்பதுடன் இவர் இயற்றிய திருக்குறள் நம் தமிழன்னையின் கிரீடமாக அழகு செய்கின்றது. அதைப் போற்றும் விதமாகத் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

தை பூசம்

இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருக்கடவுள் ஆகியோர் வழிபாடு செய்யப்படுகின்றனர்.

சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள் தைப்பூசம் என்றும், உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாள் தைப்பூசம் என்றும் கருதப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விழா உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தேவ குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்திற்கு உரியவர். அறிவுக் கடவுள் என்று அவர் போற்றப்படுகின்றார். எனவே, பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி அமையும் மாதமான தை மாதத்தில் தைப்பூச தினத்தன்று புண்ணியத் தீர்த்தங்களில் நீராடினால், அறிவாற்றல் வளரும் என்பது ஐதிகம்.

மயிலை கபாலீசுவரர் கோயிலில் தைப்பூச நாளையொட்டி முதல்நாள் சந்திரசேகர சுவாமி தெப்போற்சவமும், இரண்டாவது மூன்றாவது நாட்கள் சிங்கார வேலர் தெப்போற்சவமும் நடைபெறும். சமயபுரம் மாரியம்மன் தைப்பூசத்தன்று மாரியம்மன் வட திருக்காவிரிக்கு எழுந்தருளி, அண்ணனாகிய ரங்கநாதரிடமிருந்து பட்டாடை, பரிவட்டம் மற்றும் சீர்வரிசைகளைப் பெற்றுத் திரும்புகிறாள். 

தை அமாவாசை

தை அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும்  நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

உத்திராண்ய காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சியாண காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கு உகந்தவை எனக் கருதப்படுகின்றன.

ரத சப்தமி 

ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர் பிறையில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வட அரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார். இந்நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி தீபம் ஏற்றி சூரிய வழிபாடு செய்ய வேண்டும். அன்றை தினத்தில் தங்களால் இயன்ற தானங்களைச் செய்யலாம்.

இந்நாளில் விரத முறை கொள்வதால் ஆரோக்கியம், செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும். மனக்கவலை, வியாதி ஆகியவைற்றை நீக்கும். ரத சப்தமி அன்று சந்திரசேகர சுவாமி ரதத்தில் எழுந்தருளி, மேலண்டைக் குளக்கரையில் தீர்த்தவாரியும், பின்னர் திருவீதி உற்சவமும் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமைகளில் கற்பகாம்பாள் பிராகார உலா நடைபெறும்.

சாவித்ரி கௌரி விரதம்

தை இரண்டாம் நாள் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. பதினாறு வயது மார்க்கண்டேயருக்கு நீண்ட ஆயுளைப் பெற சிவபிரான் அருளிய விரதம் இது.

இவ்விரத்தின் சிறப்பினை மார்க்கண்டேயர் தருமருக்கு கூறி அதனை தருமர் பின்பற்றினார் என்று கூறப்படுகிறது. இவ்விரத முறையில் தை இரண்டாம் நாள் அன்று விரதமிருப்போர் அதிகாலையில் நீராடி களிமண்ணால் செய்த சாவித்திரி அம்மனை பூஜை செய்ய வேண்டும்.

அன்றைய தினம் ஒன்பது முடிச்சுக்கள் போடப்பட்ட கயிற்றினைக் கையில் கட்டி மௌன விரதம் இருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது நாட்கள் பூஜையைச் செய்ய வேண்டும். பின் மேற்கூறிய முறையில் தொடர்ந்து ஒன்பது வருடங்கள் பூஜையைச் செய்ய வேண்டும்.

ஒன்பதாவது ஆண்டு முடிவில் ஒன்பது முறங்களில் ஒவ்வொன்றிலும் வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள் கிழங்குகள் என அனைத்தும் ஒன்பது எண்ணங்களுடன் வைத்து ஒன்பது சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், முறம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நீண்ட ஆயுள், சந்தான பாக்கியம், நீடித்த செல்வம் ஆகியவை கிடைக்கும்.

பைரவர் வீரபத்ர வழிபாடு

தை மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமை முதல் தொடங்கி செவ்வாய் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரத்தின்போது பைரவருக்கு வடை மாலை அணிவிக்கப்படுகிறது . இதனால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

தை மாதத்தில் வரும் மற்றொரு முக்கிய நாள், வீரபத்திரர் வழிபாடு ஆகும். வீரபத்திரர் வழிபாடு என்பது ஓர் ஆண்டு முழுவதும் கடைபிடிக்கப்படுவதாகும். ஒரு வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட, தை மாத செவ்வாய்க் கிழமைகளில் மட்டுமாவது வீரபத்திரர் வழிபாட்டை கடைபிடிக்கலாம். அப்படி செய்தால், தீராத பகையும் பறந்தோடி விடும், அனைத்து தடங்கலும் தகர்ந்து போகும். நவக்கிரக பாதிப்புகளில் இருந்தும் நம்மை காக்கும்.

தை வெள்ளி வழிபாடு

உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தையில் வரும் வெள்ளிக் கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தை தேய்பிறை பஞ்சமியில் ராமர் பாதம் எய்தினார். 

No comments:

Post a Comment