Thursday, September 10, 2020

மார்கழி மாதம்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே, நமக்கே பறைதருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

 சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனு இராசியுட்புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஓசோன் படலமானது பூமிக்கு மிக அருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது. 

மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இல்லத்தில் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

அந்த காலத்தில் தங்கள் வீட்டில் பெண் பிள்ளை திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில், கோலத்தின் மீது பூசணிப்பூ வைப்பார்கள். இது அதிகாலையில் வீதி பஜனைக்கு வருபவர்கள் கண்ணில் படும் வகையில் வைக்கப்படும். இதன் விவரத்தை அவர்கள் புரிந்து கொண்டு, தை மாதம் திருமணம் பேசி முடித்து விடுவார்கள்.

மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன. இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமத் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 

திருவாதிரை


 

திருவாதிரை திருவிழா மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது சிவபெருமானின் வடிவமான ஆடலரசன் நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது. திருவாதிரைக் கொண்டே சிவபெருமானுக்கு ஆதிரையன் என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. இவ்விழாவானது 1500 ஆண்டுகள் பழமையானது. இவ்விழா பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். திருவாதிரை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகள், இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் ஆகியோரால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவின்போது திருவாதிரைக்களியும், ஏழுகறிக்கூட்டும் இறைவனுக்கு நெய்வேதயம் செய்யப்படுகிறது. திருவாதிரைக்கு ஒருவாய் களி என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்.

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் எல்லா இந்து மக்களாலும் இத்தினத்தில் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும். இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்சியாகும். வைகுண்ட ஏகாதசி அன்று துளசி நீரினை மட்டும் உட்கொண்டு பகல் மற்றும் இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும் என்று கருதப்படுகிறது.

பாவை நோன்பு

ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதமாயின் இவ்விரதம் பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று. ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அரங்கனை கணவனாக அடைந்தாள்.

ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புற அழகில் நாட்டம் செலுத்தாமல் இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவைநோன்பினை மேற்கொண்டாள். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

திருவெம்பாவை நோன்பு  

திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது திருவாதிரையோடு சேர்த்து விரத நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் ஆகும். இந்நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவர். இவ்விரதத்தின்போது ஒரு வேளை அவித்த உணவினை மட்டுமே உண்பர். இவ்விரத்தினை பெரும்பாலும் கன்னிப்பெண்கள் கடைப்பிடிப்பர். இவ்விரதத்தின்போது திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. இவ்வழிபாட்டில் பிட்டு நெய்வேதயம் செய்யப்படுகிறது. இதனால் இவ்வழிபாடு பிட்டு வழிபாடு என்று அழைக்கப்படுகிறது.

படி உற்சவம்

ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந்தேதி மலைமேல் உள்ள முருகன் கோவில்களில் படி உற்சவம் என்ற விழா சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் குழுக்களாக மலைபடிக்களின் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ் பாடல்களைப் பாடுகின்றனர். இவ்விழா அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சஷ்டி விரதம்

இவ்விரதம் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் 21 இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாட்களும் ஒரு வேளை மட்டும் உணவினை உட்கொள்கின்றனர். கடைசிநாள் முழு உபவாசம் மேற்கொள்கின்றனர். விரதத்தின் நிறைவு நாளன்று பலவிதமான உணவுப்பொருட்களை தானமாகக் கொடுப்பர்.

அனுமத் ஜெயந்தி


மார்கழி மாதத்தின் மூலநட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று அனுமத் ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. அனுமத் ஜெயந்தி அன்று விரதம் மேற்கொண்டு மன உறுதி, ஆற்றல், தைரியம் ஆகியவற்றை அருளுமாறு பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. அனுமனிற்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மார்கழியை சிறப்பு செய்தவர்கள்

இம்மாதத்தில் 63 நாயன்மார்களில் வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை நடத்தப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ரமண மகிரிஷி, அன்னை சாரதா தேவியார், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில் தோன்றியோர் ஆவர். மார்கழியில் பிள்ளையார், முருகப்பெருமான், சிவபெருமான், திருமால், ஆதிசக்தி என எல்லா கடவுளுரும் வழிபடப்படுகின்றனர்.  

No comments:

Post a Comment