ஆண்டின் பதினோராவது மாதம் மாசி மாதம் ஆகும். சூரியன் கும்பராசியில் சஞ்சரிப்பதால் இது கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது. இம்மாதம் முழுவதும் புனித நீராட ஏற்ற காலமாகும். இம்மாதம் புண்ணியம் நிறைந்த மாதமாகப் போற்றப்படுகிறது. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷம் என்பார்கள். அந்த நாளில் விரதம் இருப்பவர்கள் சகல தோஷங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது ஐதீகம்.
சிவபெருமான் திருவிளையாடல்கள் பலவற்றை நிகழ்த்தியது மாசி மாதத்தில்தான் என்கிறது திருவிளையாடற் புராணம். மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது. மாசி மாத பூச நட்சத்திர தினத்தில்தான் முருகப்பெருமான் சுவாமிமலையில் தன் தந்தை சிவனாருக்கு பிரணவ உபதேசம் செய்தார். அதனால்தான் பிரம்மோபதேசம் எனப்படும் உபநயனம் எனப்படும் பூணூல் கல்யாண வைபவத்தை சிறுவர்களுக்கு இந்த மாதத்தில் நடத்துவார்கள்.
முனிவர்களும், சித்தர் பெருமக்களும் கொண்டாடும் மாதம் மாசி மாதம். மகா சிவராத்திரி வைபோகத்திற்கு தயாராகும் தேவர்கள், முனிவர்கள் மற்றும் சிவகணங்கள் யாவரும், பூவுலகில் உள்ள சிவாலயங்களில் பிரசித்தி பெற்றவற்றைத் தொழ, கங்கையில் நீராடும் நாள், மாசி மாதம் பிறந்த உடன் முன்நிற்கும் உஷத் காலமாகும். வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். கும்ப மாதத்தில் நடைபெறும் விழா என்பதால் இது கும்பமேளா. பொதுவாக அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால், கிரஹண காலம் தவிர்த்து, பௌர்ணமி நாளில் தர்ப்பணம் செய்வது என்பது மாசி மாதத்தில் மட்டுமே.
பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள். காரடையான் நோன்பும் சாவித்திரி விரதமும் இந்த மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மக நாளில்தான் காமதகன விழா நடைபெறுகிறது.
சர்வ அமாவாசை/மயானக்கொள்ளை
அமாவாசை தினங்கள் அனைத்தும் முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாள்களே. ஆனபோதும் ஆடி, புரட்டாசி, தை, மாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் புண்ணிய பலன் தரக்கூடியது என்று நம்பப்படுகிறது. அமாவசை அன்று புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க கூடுதல் பலன்களைப் பெறலாம். முன்னோர்களின் ஆசி, பாவங்கள் அனைதிலுமிளிருந்து நம்மை காத்து சகல நலன்களையும் அருளும்.
மாசி மாத அமாவாசை நாளில் மயானக்கொள்ளை என்ற திருவிழா நடைபெறுகிறது. அங்காள பரமேஸ்வரி அம்மன், மயானத்திற்குச் சென்று சூறையாடுவதாக ஐதீகம். இந்நாளில் கும்ப ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்து சஞ்சரிப்பர். கதி இல்லாமல் மயானத்தில் பேயாய் அலைவோருக்கு அம்பாள் மோட்சக்தி தரும் வகையில் இந்த மயானக்கொள்ளை விழா கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரி
மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகாசிவராத்திரி. சர்வ மங்கலங்களையும் அருளும் அற்புதமான திருநாள் இது. இந்த நாளில் இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும், இரவு முழுவதும் கண்விழித்து சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டு சிவ வழிபாடு செய்ய அனைத்து நற்பலன்களும் வந்து சேரும். மாதாந்திர சிவராத்திரிகளில் இந்த விரதத்தை மேற்கொள்ள முடியாதவர்கள் மகாசிவராத்திரியன்று வழிபட்டால் ஆண்டுதோறும் சிவபெருமானை வழிபட்ட புண்ணிய பலன் கிட்டும்.
மாசி மகம்
மகாபிரளய காலத்தில் கும்பத்திலிருந்து அமிர்தம் பரவி உலகம் மீண்டும் உருக்கொண்ட தினம் மாசி மகம். வருணதேவன் தன்னைப் பீடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்ற தினம் மாசி மகம். பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காக அவதரித்து தாட்சாயணியாக மாறியதும் மாசி மகதில்தான். முருகனுக்குரிய வழிபாட்டு தினங்களில் மாசி மகம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் தவறாமல் சிவாலயம் சென்று வழிபடுவதன் மூலம் இன்னல்கள் நீங்கப்பெறலாம் என்பது நம்பிக்கை. திருமால், மஹாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில்தான் என்கிறது புராணம்.
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர
நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும்
ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும்
விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப்
பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது
அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே
மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக்
கொண்டாடுவர்.
பிரதலத்தில் செய்யும் பாவம் காசி தளத்தில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு. மாசி மகம், மகாமகம் என்றாலே நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகாமகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.
மஹாவிஷ்ணு, உமாமஹெஸ்வரன், முருகன் ஆகிய
மூன்று தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். மாசி மகத்தன்று நெல்லையப்பர்
கோயில் பொற்றாமரை தீர்த்தக் குளத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்பத் திருவிழா
நடத்துவது வழக்கம். இதை அப்பர் தெப்பம் என்பார்கள். மாசிமகம் நாளன்று விருத்தாசலம், கடலூர், பவானி கூடுதுறை, ராமேஸ்வரம் என்று
பல புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை பழக்கமாகக்
கொண்டுள்ளனர் தமிழக மக்கள். அதே போல பெரும்பான்மையான ஆலயங்களில் மாசிமக நாளன்று
தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெறுவதைக் காணலாம்.



No comments:
Post a Comment