Monday, September 7, 2020

கார்த்திகை மாதம்

தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். சூரியன் விருச்சிக இராசிக்குள் புகுந்து அங்கே பயணம் செய்யும் காலமான 29 நாள், 30 நாடி அல்லது நாழிகை, 24 விநாடி அளவே கார்த்திகை மாதமாகும். நம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த மாதத்தில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.

முடவன் முழுக்கு 

முடவன் முழுக்கு என்பது கார்த்திகை முதல் நாள் காவிரியில் நீராடுவதைக் குறிக்கும். கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.

முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு அருகில் வசித்து வந்தான். ஐப்பசியில் காவிரியில் நீராடுவதற்காக மயிலாடுதுறைக்கு செல்ல தீர்மானித்து பயணத்தைத் துவங்கினான். மயிலாடுதுறையில் காவிரியை நீராட அணுகியபோது கார்த்திகை மாதம் முதல்நாள் வந்துவிட்டது. துலா மாதத்தில் நீராட முடியாததை நினைத்து முடவன் வருந்தி இறைவனிடம் பிரார்த்தித்தான். இறைவனும் "இன்றைய தினம் கார்த்திகை முதல் தேதி ஆனாலும் பரவாயில்லை, காவிரியில் நீராடு ,உனக்கு முழுமையான துலா ஸ்நான பலன் கிட்டும்."

இனி யார் கார்த்திகை முதல் தேதி அன்று காவிரியில் நீராடினாலும், ஐப்பசி மாத முழுவதும் நீராடிய பலன் கிடைக்கும்என்று அருளினார். இந்நிகழ்வே முடவன் முழுக்கு என்று அழைக்கப்படுகிறது.

வளர்பிறை துவாதசி

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி நாளில் திருமால் துளசியை திருமணம் செய்து கொண்டார். எனவே கார்த்திகை மாதம் முழுவதும் திருமாலை துளசி தளத்தால் அர்ச்சனை செய்ய ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். இம்மாதத்தில் திருமாலை கஸ்தூரியால் அலங்கரித்து தாமரை மலர்களால் வழிபட பெரும் பாக்கியத்தைப் பெறலாம். கார்த்திகை மாத துவாதசி நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் கங்கைக்கரையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.

கார்த்திகை ஞாயிறு

கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் புண்ணிய நதிகளில் நீராடுவது மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அப்படி நீராடி, திருமாலை வணங்கினால், பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் உண்டான பாவம் மற்றும் பிறருக்கு மனச் சஞ்சலம் தந்ததால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் அறிவுறுத்துகிறது

கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது, இதனால் எமபயம் நீங்கும். நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும். 

தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானின் அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்கு உள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

சோமவார விரதம்

கார்த்திகை என்றால் நினைவுக்கு வருவது சோமவாரம் (திங்கட்கிழமை), சந்திரன் சிவபெருமானை வணங்கி நலம் பெற்ற திருநாள். அதனால் இந்த சோமவாரத்தில் சிவ பெருமான் சந்திர மெளலீஸ்வரராக ழுந்தருளி அருள் செய்வார். இந்த தினத்தில் வலம்புரிச் சங்கினால் செய்யப்படும் சங்காபிஷேகம் பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றால நாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.

கார்த்திகை பௌர்ணமி

கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம். கார்த்திகை பௌர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து அம்மை அப்பனாய் வந்து அருள்பாலிக்கின்றனர். கார்த்திகை பௌர்ணமி திதி அன்று ஒட்டிச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவண்ணாமலையை கார்த்திகைப் பௌர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், எமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மஹாவிஷ்ணு மஹாலட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

கார்த்திகை தீபம்

முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில், ஆலயங்களுக்குச் செல்வதும் வீட்டில் தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றி வைத்து வழிபடுவதும் மிகுந்த நன்மைகளைத் தந்தருளும். இறை சக்திகளின் சாந்நித்யம் நம்மையும் நம் வீட்டையும் சூழ்ந்து நம்மைக் காக்கும் என்பது ஐதீகம்.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.

குமராலய தீபம்: முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.

விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.

சர்வாலய தீபம்: ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.

திருவண்ணாமலை கார்த்திகை


காலையில் பரணி தீபம் ஏற்றியவுடன், மாலை மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.

இக்கொப்பரையை 1668-ல் பிரதானி வேங்கடபதிஐயர் என்பவர் வெண்கல கொப்பரை செய்து கொடுத்தார். பின்பு 1991-ல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும், 1000 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது.

கடும் தவம் மேற்கொண்ட அன்னை உமையவள், கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடபாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.

https://www.google.co.in/maps/search/thiruvannamalai+temple/@12.2356945,79.0560113,15z/data=!3m1!4b1?hl=en

ஏகாதசி விரதம்

கார்த்திகை மாதம் ரமா ஏகாதசி மிகவும் சிறப்பான நாளாகும். ஒளி பொருந்திய ஏகாதசி என்று பொருள். இன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி பதினோரு முறை வலம் வந்து வணங்குவதினால் தாயின் அன்பு போல் பெருமாளின் அருள் கடாட்சம் பெருகி வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், மன நிம்மதி அதிகரிக்கும். குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு. கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும். கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது. இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும். 

முருகன் வழிபாடு

 

கார்த்திகை மாதத்தில் பிறந்ததால் முருகனை கார்த்திகேயன் என்றும் அழைப்பர். முருகப்பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். 

 

No comments:

Post a Comment